கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் எனும் கொடிசியா சார்பாக ஏழாவது ஆண்டாக கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2023 எனும் கண்காட்சி வரும் ஜூலை 21 ஆம் தேதி துவங்கி 30 ந்தேதி வரை நடைபெற உள்ளது..இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, புத்தக கண்காட்சியின் தலைவர் ரமேஷ், மற்றும் கொடிசியா தலைவர் திருஞானம் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
பத்து நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தக திருவிழாவை தமிழக கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.,
இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,குஜராத்,பஞ்சாப் மகாராஷ்டிரா, மற்றும் புதுடெல்லி போன்ற பல்வேறு இடங்களில் இருந்து புகழ்பெற்ற பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். லட்சக் கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இங்கு காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும், கலைஞர்களும் கலந்து கொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள் நாள்தோறும் கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது..
புத்தக கண்காட்சிக்கு அனுமதி இலவசம். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.புத்தக திருவிழாவில் சிறப்பு அம்சமாக மொழிபெயர்ப்பு மற்றும் இளம் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளதாகவும், நாள்தோறும் பல்வேறு புத்தக வெளியீடுகள் நடைபெற உள்ள இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் இலக்கிய நிகழ்வுகள் கதை சொல்லும் நிகழ்வுகள் பேச்சு, சிறுகதை, கவிதை, வினாடி வினா, உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்..இந்த சந்திப்பின் போது புத்தக கண்காட்சி துணை தலைவர் ராஜேஷ்,இலக்கிய கூடல் தலைவர் பாலசுந்தரம்,கொடிசியா கவுரவ செயலாளர் சசிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்