தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம் என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் குடமுருட்டி ஆற்றுக்கும் சுள்ளான் ஆற்றுக்கும் இடையில் உள்ள நல்லூர், இனாம்கிளியூர், கோவிந்தகுடி, சந்திரசேகரபுரம், பூண்டி,
ஆதிச்ச மங்கலம், விருப்பாட்சிபுரம்,வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புஞ்சையில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது தேங்காய் சில்லறை விற்பனை ரூ. 10லிருந்து குறைந்து 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேங்காய் பறிப்பதற்கான போதிய ஆட்கள் இல்லாத நிலையில் கூலியும் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக தென்னை வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தென்னை வளர்ப்பில் கூடுதல் மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண்மை துறையினர் பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

தென்னையில் கூடுதல் மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரம் இடுதல் அவசியம். தென்னை நுண்ணூட்ட கலவை உரத்தில் துத்தநாக சத்து (5சதவீதம்), இரும்புச்சத்து(3.80), மேங்கனீசு சத்து (4.8), போரான் (1.6) மற்றும் தாமிர சத்து (0.05) என்ற விகிதத்தில் உள்ளது. இரும்புச் சத்தானது, தென்னை இலையில் பச்சையம் உருவாவதற்கு நடக்கும் வினையிலும், பயிர் வளர்சிதை மாற்றங்களில் ஈடுபடும் பல்வேறு என்சைம்கள் எனப்படும் நொதிப்பான்கள் உருவாவதிலும், அதனை இயக்குவதிலும் உறுதுணை புரிகிறது.

மேங்கனீசு சத்தானது, மண்ணில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்களை, தென்னை எடுத்துக் கொள்ள உறுதுணை புரிகிறது. போரான் சத்து தென்னை இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கும், குரும்பை உதிர்வதை தடுக்கிறது. தாமிர சத்தானது, தென்னையில் ஒளிச்சேர்க்கை நடக்கும் வினையிலும், நொதிப்பான்களை உருவாக்குவதிலும், பச்சையம் தயாரிப்பிலும், அதிக எண்ணிக்கையில் காய்கள் உருவாவதற்கும் உதவி புரிகின்றது.

விவசாயிகள் தென்னை நுண்ணூட்ட கலவை உரத்தை, மரம் ஒன்றிக்கு ஒரு கிலோ வீதம், 50கிலோதொழ உரத்துடன் கலந்து ஆண்டுக்கு ஒரு முறை இட வேண்டும். தென்னையில் நுண்ணூட்ட கலவை உரம் இடுவதால், குரும்பை உதிர்வதை தடுக்கப்பட்டு, அதிகமான காய்கள் பிடிக்க உறுதுணை புரிகிறது.

அதனால் நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி தென்னை விவசாயிகள் அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *