அலங்காநல்லூர்
திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி, என்று போற்றி புகழ்ந்து பெருமையுடன்அழைக்கப்படுவது, நூற்றி எட்டு வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது, மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலாகும், இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
அதன்படி இந்த வருட திருவிழா நேற்று காலையில் மேளதாளம் முழங்க கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதில் அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், வண்ணபூ மாலைகள் இணைக்கபட்டு கருடன் உருவம் பொறித்த கொடி காலை 10.25மணிக்கு ஏற்றப்பட்டது.
இதைதொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தத்தால் விசேஷ பூஜைகளும் தீபாரதனைகளும் பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது.
இதில் உற்சவர் ஸ்ரீதேவி பூமிதேவி, சமேத கள்ளழகர் சுந்தரராச பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் தீபாரதனைகள் நடந்தது. முன்னதாக மூலவர் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து நேற்று இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது’தொடர்ந்து 25ம் தேதி இன்றுசெவ்வாய்கிழமை காலையில் தங்க பல்லக்கு உற்சவமும், இரவில் சகல பரிவாரங்களுடன் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.
26ம் தேதி வழக்கம் போல் காலை நிகழ்ச்சியும் அன்று இரவு அனுமார் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 27ம் தேதி இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 28ம் தேதி வெள்ளிகிழமை காலையில் 7மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருளிகிறார்.
அன்று இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். 29ம் தேதி இரவு யானை வாகனத்திலும் , 30ம் தேதி இரவு புஷ்ப சப்பரத்திலும், 31ம் தேதி இரவு தங்ககுதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்றுகாலையில் 6 .30மணிக்கு மேல் 7.30 மணிக்குள் முக்கிய திருத்தேரோட்ட விழாவிற்கு சுவாமி, தேவியர்களுடன் எழுந்தருளுகிறார்.
தொடர்ந்து 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் விழா நடைபெறும். அன்று இரவு பூப்பல்லாக்கும், 2ஆம் தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், 3ஆம் தேதி வியாழக்கிழமை உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.
இந்த திருவிழாவில் முன்னதாக நேற்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் துணை ஆணையர் ராமசாமி, பெரிய புள்ளான் எம்.எல்.ஏ. ஒன்றிய குழு தலைவர் பொன்னுச்சாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், அருள் செல்வம், பிரதீபா, உதவி பொறியாளர் கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, பேஷ் கார் முருகன், உதவி பேஷ்கார் ஜெயராமன், மற்றும் திருக்கோயில் பணியாளர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.