சர்வதேச ஜெயின் வர்த்தக நிறுவனம் (JITO – ஜிடோ), ஜெயின் சமுதாயத்தின் அறிவுசார், பொருளாதார மேம்பாடு மற்றும் சேவைக்கான மாபெரும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
ஜிடோ, 26 நாடுகளில் 68 கிளைகளைக் கொண்டுள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் அமிர்தகால மஹோத்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழா,கோவையில் ஜிடோ சார்பில், ஜூலை 1 முதல் தொடங்கி ஆகஸ்ட் 27 வரை எட்டு வாரங்களுக்கு கொண்டாடப்படுகிறது. இதில் மரக்கன்றுகள் நடும் விழா முக்கியத்துவம் பெறுகிறது.
வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நகரங்களில், மரக்கன்றுகள் நட வேண்டியது அவசியம். கோயம்புத்துார் ஜிடோ இரண்டு திட்டங்களாக குமாராசாமி குளத்தில் 30 வகையான பூக்கள் தரும் 250 மரங்களை ஒரு வனமாக நட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மரங்கள், பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள், உயிரினங்களை ஈர்ப்பதாக அமையும். மற்றுமொரு இடத்தில் பலவகை பறவைகளை கவரும் பழமரங்கள் நடப்படும்.
இந்த மரக்கன்று நடும் விழாவை, கோவை மாநகராட்சி துணை ஆணையர் கே.சிவக்குமார் ஜூலை 27ல் துவக்கி வைத்தார்.
கோயம்புத்துார் ஜிடோ தலைவர் திரு.ராகேஷ்ஜி மேத்தா, ஜிடோ அபெக்ஸ் இயக்குனர் நிர்மல்ஜெயின் செயலாளர் லலித்ஜி மேத்தா, ஜிடோ மகளிர் அணி தலைவி பூனம்ஜி பாப்னா, தலைமை செயலாளர் பிரக்யாஜி பேய்ட் உள்ளிட்டோர் துவக்க விழாவில் பங்கேற்றனர்.