நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகள்

நினைவுகளின் சாயங்கள்!

நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகள் malarmagal59@gmail.com

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

காலம் வெளியீடு, 25,

மருதுபாண்டியர் 4வது தெரு,
(சுல்தான் நகர்), கருமாரியம்மன் கோவில் எதிர் வீதி, மதுரை – 625 002.

பக்கம் : 96, விலை : ரூ. 100
.

**

நூலாசிரியர் கவிஞர் மலர்மகள் அவர்கள் கனரா வங்கியில் பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளார். கணையாழி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். ‘நினைவுகளின் சாயங்கள்’ என்ற புதுக்கவிதை நூல் அவரது மன வண்ணத்தை படம்பிடித்துக் காட்டி உள்ளது. பாராட்டுக்கள். அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தி. வெளியிட்ட காலம் வெளியீட்டிற்கு பாராட்டுக்கள்.

கவிஞர் ஸ்ரீ ரசா அவர்களின் பதிப்புரை நூலிற்கு மகுடமாக உள்ளது. ஆசிரியர் கவிஞர் மலர்மகள் தன்னுரையில் இலங்கை வானொலியில் பாடல் கேட்ட பொழுதுகளில் கவிஞராக உருவெடுத்த மலரும் நினைவுகளைப் பதிவு செய்துள்ளார்.

வலிமை மிக்க உணர்ச்சிகள்

பொங்கி வழிந்தோடும்
ஓட்டத்துக்குப் பெயர் கவிதை (வேர்ட்ஸ்வொர்த்)

பிரபலக் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் அவர்களின் கவிதை இலக்கணத்திற்கு பொருத்தமாக நூலின் எல்லாக் கவிதைகளையும் நூலாசிரியரின் வலிமைமிக்க உணர்ச்சிகளாக எண்ண அலைகளாக உள்ளன. பாராட்டுக்கள்.

வயலின் ஆன்மா!

நாகலிங்கப் பூக்களின் போதையோடு
சமரசங்களைத் தாண்டி

பன்னாட்டு நிறுவனமொன்றுக்கு
கைமாறிய மணித்துளி முதல்

அலைந்து திரிகிறது வயலின் ஆன்மா!
எந்தவொரு சமாதானத்துக்கும் அடங்காமல்!

பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விளை நிலங்களை விற்றுவிட்டு தவிக்கும் உழவர்களின் மன உளைச்சலை படம்பிடித்துக் காட்டியது கவிதை.

மலர்மகள் என்பது இயற்பெயர் தான். புனைப்பெயர் அன்று, ஆனால் காரணப்பெயராகி விட்டது. மலர் போன்ற மென்மையுடன் வாசத்துடன் சிந்தித்து கவிதைகள் வடித்துள்ளார். ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் குறிப்பாக மணமான பெண்கள் கவிதை எழுதிட காலம் வாய்ப்பதில்லை. வாய்த்தாலும் நூலாக்க முடிவதில்லை. நூலாக்கிய முயற்சிக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

உயிர்ப்பு!

என்னை

எப்போதும்

உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள /
விரும்புகிறேன்

தூங்கும் நேரம் தவிர
உயிர்ப்பு வழங்கினால்

மனமெங்கும் வந்து
விழுகின்றன

குப்பைகள்

கூடிக் குலவியபடி.

உயிர்ப்புடன் இருந்ததால்தான் கவிதைகள் எழுத முடிந்தது. கவியரங்குகளில் கவி பாட முடிந்தது. சும்மா இருந்தால் இரும்பு கூட துருப்பிடித்து விடும். பக்கத்து வீட்டுப் பெண்களுடன் புறம் பேசுவது குப்பை என்று குறிப்பிட்டது சிறப்பு.

முழக்கம்!

என்ன தான் மேடையில் முழக்கமிட்டு வந்தாலும்
வீட்டிற்குள் வந்ததும் முழங்கால் இடுகிறது

வார்த்தை!

பெண்ணுரிமையைப் பற்றி மேடையில் முழக்கமிட்டாலும் பெண்கள் வீட்டில் அடங்கியே வாழ வேண்டி உள்ளது. பேச வேண்டி உள்ளது என்ற இன்றைய யதார்த்த உண்மையை போட்டு உடைத்து உள்ளார். பாராட்டுக்கள்.

நதியின் கவலை!

சாயக்கழிவுகளுக்குச் சத்திரமாயும்
இயற்கை உபாதைகளுக்குத்

திறந்தவெளிப் பல்கலைக்கழகமாயும்

தேசவிரோதச் செயல்களுக்கு

முகாமாயும்
சூறையாடப்பட்டு

நிறம் மாறி நிலை தடுமாறும்

அழகுடல்?

தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்த வைகையை பார்த்து எழுதினாரோ? என்று எண்ணத் தோன்றியது. வைகை ஆறு மட்டுமல்ல, பல ஆறுகளின் நிலையும் அவல நிலை தான். நாகரீகத்தின் பிறப்பிடம் ஆறு என்றனர். ஆனால் மணல் கொள்ளை தொடங்கி எல்லா அநாகரீகமும் அரங்கேறும் இடமாக ஆறுகள் மாறியது கசப்பான உண்மை.

கையெழுத்து!

கண்களைக் கைது செய்யும்

கையெழுத்தின் அழகு!
கூடுதல் மதிப்பெண் பெறக்

காரணியாவதும் உண்டு!
கூடுதல் பணிகள்

நகர்த்துவதற்கான
சாத்தியக் கூறுகளாக மாறுவதும் உண்டு.

உண்மை தான். அலுவலகங்களில் கையெழுத்து அழகாக இருப்பவரிடமே, எழுது, எழுது என்று பல பணிகளை சாற்றிவிடும் நடப்பை எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார்.

கண்டிப்பு !

தாத்தா இறந்தபின்னும் வீடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது
அவர் தடியின் ஓசை!

கடமைகளை நினைவுறுத்தியபடி!

கூட்டுக்குடும்பமாக தாத்தாவுடன் வாழ்ந்த தலைமுறையின் உள்ளத்து உணர்வை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார், பாராட்டுக்கள்.

தாத்தா மறைந்து விட்டாலும், தாத்தா பற்றிய நினைவுகள் மறைவதில்லை. எனக்கு வெளிஉலகம் கற்றுத்தந்து குருவாக இருந்து என்னை உருவாக்கியவர் என் தாத்தா, அம்மாவின் அப்பா, அவர் பெயர் செல்லையா. விடுதலைப் போராட்ட வீரர். அவரைப் பற்றிய நினைவுகளை மலர்வித்தது தாத்தா பற்றிய இக்கவிதை.

கட்டாயம்!

என்ன தான் உயர உயரப்

பறந்தாலும்

தரை இறங்க
வேண்டிய

கட்டாயத்தால்

சிறகுகள் விரிந்தாலும்
சுருக்கப்படுகின்றன

சில நேரம்!

பெண்ணியம் பற்றி பேசிடும் பெரும் கவிதையாக இதனைக் காண்கிறேன். மாவட்ட ஆட்சித் தலைவர், மருத்துவர், பொறியாளர், விமானி என பெரும்பதவிகளில் பெண்கள் வகித்தாலும் அவரது இல்லத்தில் அவரது கணவருக்குக் கட்டுப்பட்டு அடிமையாகவே வாழ வேண்டிய நிலைதான் உள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணாதிக்க நிலை தொடர்ந்தே வருகின்றது. இந்நிலை மாற வேண்டும். சமநிலை பெண்கள் அடைய வேண்டும் என்ற உரிமைக்குரலாகவே காண்கிறேன்.

நினைவின் வயது மறதி!

பலகாலமாயப்

பசுமையாய் இருக்கும்

வதந்திகள்
மட்டும்

ஒருபோதும் முதுமையடைய விடுவதில்லை
நினைவின் வயதை!

நினைவுகள் இளமையாகவே இருக்கின்றன. வயதாவதில்லை நினைவுகளுக்கு என்ற உண்மையை உணர்ந்து வடித்த கவிதை நன்று.

காதல் மணம்!

உணர்வுகளைத் தாண்டி

மேலெழுந்து மிதக்கும்
இனம்புரியாக் காதல் மணம்?

சங்க காலத்தில் 32 பெண்பாற் புலவர்கள் இருந்தார்கள். இன்று மக்கள்தொகைக்கு ஏற்ற அளவில் பெண்கவிஞர்கள் பெருகவில்லை என்பது உண்மை. காரணம் குடும்ப சூழ்நிலை. ஆணாதிக்க சமுதாய நிலை. நூலாசிரியர் கவிஞர் மலர்மகள் போலவே குடும்பத் தலைவிகள் கவிதை நூல் கொண்டுவர வேண்டும்.

வேண்டுகோள் : கவியரங்கில் பாடிய கவிதைகளைத் தொகுத்து அடுத்த நூலையும் உடனடியாக வெளியிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *