திருவொற்றியூரில் ரூ 58.64 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். திருவொற்றியூர்,ஆக. திருவொற்றியூர் மணலி இடையே உள்ள பக்கிங் கால்வாய் மீது போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரூ 58.64 கோடி செலவில் 530 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது
ஆனால் 18 மாதங்களில் முடிக்க வேண்டிய இந்த மேம்பால பணி பல்வேறு காரணங்களால் முடிக்கப்படாமல் தாமதமாகியது. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் சென்று மிகவும் சிரமப்பட்டனர். இதை அடுத்து இப் பணியை முடிக்க வலியுறுத்தி மணலி சேர்க்காடு வியாபாரிகள் சங்கம், கம்யூனிஸ்ட் மற்றும் பொதுநல அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலகட்ட போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இந்த பணியை துரிதப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உயர்மட்ட மேம்பால பணி துரிதப்படுத்தப்பட்டு சில தினங்களுக்கு முன்பு பணிகள் முடிவடைந்தது. இதை அடுத்து இந்த உயர்மட்ட கால்வாய் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு இன்று காலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து புதிய உயர் மட்ட மேம்பாலத்திற்கு அருகில் கலாநிதி வீராசாமி எம் பி,எம் எல் ஏக்கள் மாதவரம் சுதர்சனம்,கே.பி. சங்கர்,மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு ஏ.வி.ஆறுமுகம், மேற்கு பகுதி திமுக செயலாளர் வை.ம அருள்தாசன், நி.நித்யாதாசன் மற்றும் கவுன்சிலர்கள் திமுக தொண்டர்கள் என ஏராளமான திறக்கப்பட்ட மேம்பாலம் பகுதிக்கு வந்து நீண்ட நாள் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மலர்விழி, கண்காணிப்பு பொறியாளர் கந்தசாமி. உதவி பொறியாளர் விக்னேஷ் உட்பட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்