சாலை மறியலில் ஈடுபட்ட, 200க்கும் மேற்பட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, திருவொற்றியூர், தேரடி தபால் நிலையம் அருகே, விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராக மோடி அரசை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில், மத்திய குழு உறுப்பினர் வாசகி தலைமையில், 500க்கும் மேற்பட்டோர், கையில் பதாகைகள் ஏந்தி, கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், லோகநாதன், பாக்கியம் உள்ளிட்ட, 200 க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திடீர் சாலை மறியலால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.