கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள முருகேசன் என்பவருக்கு சொந்தமான தேனீர் கடையில் இன்று 10ற்கும் மேற்பட்டோர் டீ அருந்திக்கொண்டிருந்த நிலையில், சிலின்டர் காலியானதால், புதிய சிலின்டரை மாற்றியுள்ளார்
முருகேசன். அப்போது எதிர்பாராத விதமாக புதிய சிலின்டரில் கேஸ் லீக்காகி திடிரென சிலின்டர் பகுதியில் தீ பிடித்து எரியத்துங்கியுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் முருகேசன் பொது மக்கள் அனைவரையும் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்திவிட்டு, அவரும் அவ்விடத்திலிருந்து தூரமாக விலகி, போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
சுமார் 10 நிமிடத்தில் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஈரத்துணி கொண்டு பற்றி எரிந்துக்கொண்டிருந்த சிலின்டரின் நெருப்பை அணைத்தனர்.
பின்னர் அவ்விடத்திலிருந்து சிலின்டரை அப்புறப்படுத்தினர். இதனால் தேனீர் கடையிலிருந்த சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக உரிமையாளர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.