நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள கரைப்பாளையத்தில் ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் நித்தியா (27) கொலையை அடுத்து நடைபெற்ற சமூக விரோத செயல்களால் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது .
கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உயிரிழந்த நித்தியா கணவர் மற்றும் குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
மேலும், அதை தொடர்ந்து நடந்த குற்ற சம்பவங்களால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 6,95,232, வடகரையாத்துர் ஊராட்சியில் 7 பணிகளுக்கு ரூ.72 லட்சம், ஆனங்கூர் ஊராட்சியில் 4 பணிகளுக்கு ரூ.22 லட்சம், அ.குன்னத்துர் ஊராட்சியில் 5 பணிகளுக்கு ரூ.98 லட்சம், பிலிக்கல்பாளையம் ஊராட்சியில் ரூ.28 லட்சம் வழங்கப்பட்டது.
நிவாரண உதவி மற்றும் நலத்திட்ட பணிகள் என மொத்தம் ரூ.2 கோடியே 34 லட்சத்திற்கு வழங்கப்பட்டது.
பின்னர் நிகழ்வில் அமைச்சர் டாக்டர். மா. மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் .ச.உமா ஆகியோர் பேசும்போது, இனி வரும் காலங்களில் எவ்வித கசப்புணர்வும் இன்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். பாதிக்கப்பட்ட நித்யா குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றனர்.