கோவை
தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் கட்டப்படுவதை அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை வரவேற்று உள்ளது.
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவரது புகைப்படத்திற்கு பல்வேறு அமைப்பினர் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் மூன்று கோடி மதிப்பில் திருவுருவ சிலை உடன் கூடிய மணிமண்டபம் தமிழக அரசு சார்பில் கட்டப்படும் என முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினரும் முதல்வரின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து அந்தப் பேரவையின் தலைவர் மனுநீதி சோழன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பை தங்கள் பேரவை மகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டுகிறது எனவும் தமிழக அரசிற்கு தங்கள் பேரவை நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.