எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே பணமங்கலம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை பிடித்து வனத்துறையில் ஒப்படைத்த கிராம மக்கள். பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்பட்ட குரங்குகள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பணமங்கலம் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. வீட்டு விலங்குகளான ஆடு மாடுகளை கடித்தும் வீட்டுக்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடியும் பொதுமக்களை மிகவும் அவதிக்கு உள்ளாக்கியது.
குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த கோரி சீர்காழி நகராட்சியில் பலமுறை தெரிவித்தோம் அதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து கிராம மக்களே தங்களது சொந்த செலவில் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த முடிவெடுத்தனர்.
தொடர்ந்து குரங்கு பிடிக்கும் நபர்களை அழைத்து வந்து கூண்டுகள் அமைத்து 9 குரங்குகளை பிடித்தனர்.குரங்குகள் பிடிக்கப்பட்டது குறித்து சீர்காழி வனத்துறைக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த சீர்காழி வனத்துறை வனவரிடம் குரங்குகளை ஒப்படைத்தனர். இதனையடுத்து பிடிக்கப்பட்ட குரங்குகள் அனைத்தையும் வனத்துறையினர் மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுவித்தனர்