வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள் இரண்டு நாட்கள் கலாச்சார சுற்றுலா….
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பாக “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள் இளம் மாணவர்கள் மொத்தம் 60 பேர் இரண்டு நாட்கள் கலாச்சார சுற்றுலா மேற்கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள் இளம் மாணவர்கள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம் ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும்” என அறிவித்துள்ளார்கள்.
அதன் அடிப்படையில் “வேர்களைத் தேடி” என்ற திட்டம் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை துறைகளுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டின் தொன்மை, பெருமை, கலாச்சாரத்தினை விளக்கும் இடங்களுக்கும் தமிழர்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் கலை கலைகளை அறிமுகப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் கொண்ட இருவார பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்து செல்வது இத்திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சுமார் 60 மாணவ மாணவிகள் வேர்களைத் தேடி என்கிற பண்பாட்டு கலாச்சார சுற்றுலா திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய பண்பாட்டு மற்றும் சுற்றுலா இடங்களுக்கு மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். இக்குழுவினர் கீழடி அருங்காட்சியகம் சென்று பாரம்பரிய சிற்ப கலையை கண்டு களித்தனர்.
பின்னர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று ஆயிரம் கால் மண்டபம்,தெப்பகுளம் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோவில் நிர்வாகம் சார்பாக வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
அதனை தொடர்ந்து திருமலை நாயக்கர் அரண்மனையில் கலை பண்பாட்டு துறையின் சார்பாக பாரம்பரிய பறை இசை முழங்கி
வரவேற்பு செய்யப்பட்டு வில்லுப்பாட்டு, பறையாட்டம் மற்றும் மல்லர் கம்பம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அரசு அருங்காட்சியகம் சார்பில் நடைபெற்ற பாரம்பரிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும் நமது தமிழ் கிராமப்புற பாரம்பரிய
விளையாட்டுகளான பம்பரம், கிளிதாண்டு கோலிகுண்டு போன்ற பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். அதன்பின்னர் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் பரதநாட்டியம், யோகா கலையை கற்றனர்.
இதனை தொடர்ந்து உலகத் தமிழ்ச் சங்க காட்சி கூடத்தில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவிடம் மாணவ மாணவிகள் தமிழ் இலக்கியம். கலை இசை பட்டிமன்ற சிறப்புகளை பற்றி கலந்து உரையாடினர் மற்றும் உலக தமிழ் சங்கத்தில் அய்யன் திருவள்ளுவர் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அதன் பின்னர் புது நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் சென்று முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நூலகத்தை கண்டு களித்தனர். தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் சுற்றுலாவை நிறைவு செய்து திருச்சி மாவட்டத்திற்கு கிளம்பினர்.