நூல் ஆசிரியர் ஜெய.ராஜமூர்த்தி
நூலின் பெயரே நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. வள்ளலாரும் பெரியாரும் இருவேறு துருவங்களாக அறியப்பட்ட மண்ணில் மிகச்சிறந்த ஒப்பீடாக ஆய்வு நூலாக மலர்ந்துள்ளது. மருத்துவராக இருக்கும் நூல் ஆசிரியர் ஜெய.ராஜமூர்த்தி அவர்கள் உடல்நல மருத்துவர் மட்டுமல்ல மன நல மருத்துவராக திகழ்கின்றார். மனதை செம்மைப்படுத்தும் பணியினை இந்நூல் செவ்வன செய்துள்ளது.

நூலிற்கு அணிந்துரை நல்கிய முனைவர் திரு.த.தியாகராஜன் முத்தாய்ப்பாக பதிவு செய்துள்ளார்கள். பெரியார் கடவுளை மற மனிதனை நினை என்றார். வள்ளலார் மனிதனையும் தாண்டி பயிர்களையும் நினை என்றார். இருவருக்கும் உள்ள ஒற்றுமை இருவருமே சாஸ்திர சம்பிரதாய மூடநம்பிக்கைகளை சாடி மனிதநேயத்தை வலியுறுத்திய மாண்பாளர்கள். அறிவை விரிவு செய்திட வலியுறுத்தியவர்கள் பகுத்தறிவைப் பயன்படுத்திய மாண்பாளர்கள். அறிவை விரிவு செய்திட வலியுறுத்தியவர்கள். பகுத்தறிவைப் பயன்படுத்தச் சொன்னவர்கள் வள்ளலாரின் பாடலுக்கு எதிராக நீதிமன்றம் சென்றவர்கள் தோற்ற வரலாறு இந்நூலில் உள்ளது. வள்ளலார் திருவள்ளுவரைப் போலவே ஆட்சியாளர்களின் நெறிமுறையை பாடி உள்ளார். “வைதீக எதிர்ப்பில் வள்ளலார் மிதவாதி என்றால் தந்தை பெரியார் தீவிரவாதி” எனலாம் என்கிறார். உண்மை. சில இடங்களில் மிதவாதம் வெற்றி தருவதில்லை. இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்ததில் காந்தியடிகளுக்கு பெரும்பங்கு உண்டு. அதே நேரத்தில் நேதாஜிக்கும் பங்கு உண்டு என்பது மறுக்க முடியாது அதுபோலத்தான். தமிழகம் அமைதிப் ப+ங்காவாக திகழ்கின்றது என்றால் அதற்குக் காரணம் வள்ளலார் பெரியார் போன்றவர்களின் போதனைதான் என்றால் மிகையன்று அதனை மெய்ப்பிக்கும் விதமாக நூல் வந்துள்ளது.

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர் வள்ளலார் பயிருக்கும் உயிருண்டு என்று விஞ்ஞானம் இன்று சொல்வதை அன்றே பயிரின் உயிருக்காக பாடியவர் வள்ளலார்.

ஒரு முறை தந்தை பெரியார் வள்ளலார் ஆலயம் சென்று இருந்த போது குறிப்பிட்ட எல்லைக்கு உள்ளே வர மறுத்தார். காரணம் கேட்ட போது “புலால் சாப்பிடுபவர்கள் வரக்கூடாது” என்று அறிவிப்பு உள்ளது. நான் புலால் சாப்பிடுபவன் எனவே வரவில்லை என்றார். அந்த அளவிற்கு நாணயமிக்க ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார். அவருக்கு பெருமை சேர்த்துள்ளது இந்நூல்.

வள்ளலாரின் அறிவார்ந்த பாடல்களையும் அதற்கான விளக்கத்தையும் நூலின் நன்கு பதிவு செய்துள்ளார்கள். ஆன்மீகம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள். ஆடம்பர சடங்குகள் சம்பிரதாயங்களில் மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து இருப்பவர்கள் அவசியம் படித்து தெளிய வேண்டிய அற்புத நூல் மனித நேயத்தை வலியுறுத்தும் நூல்.

“வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம்” என்ற வள்ளலார் கருத்து அவர் வாழ்ந்த அந்தக் காலத்தில் 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாளில் சிதம்பரத்திற்கு அருகாமையில் உள்ள மருதூர் என்றும் சிற்றூரில் பிறந்தார். 19 நூற்றாண்டிலேயே மிகப்பெரிய அறிவுப்புரட்சியை அமைதியாக விதைத்தவர் வள்ளலார். உயிர்களிடம் அன்பு செய் என்ற கருத்து உரக்கப் பாடியவர். உலகம் உணரப்பாடியவர்.

கடவுள் கொள்கையில் பெரியாரின் முடிவு என்ன? என்பதை அழகாக விளக்குகின்றார் “மனிதனுக்கு மிக அருமையான அறிவும் பகுத்தறிவும் சக்தியும் ஆழ்ந்து சிந்திக்கும் தன்மையும் அனுபவத்திற்கு ஏற்ப நடக்கும் உரிமையும் இருக்கும் போது கடவுள் எதற்கு? என்பதை நல்ல வண்ணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்”

நூலாசிரியர் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி சகலகலா வல்லவராக உள்ளார். மருத்துவர் திருவெண்காட்டின் வள்ளலார் தமிழ்மன்றத்தின் தலைவராக இருந்து திறம்பட நடத்தி வருவது மனிதநேய உதவிகளை ஏழைகளுக்குச் செய்வது. வள்ளலாரின் வலுசேர்க்கும் விதமாக இலக்கியங்கள் படைப்பது இப்படி பன்முக ஆற்றலாளராகத் திகழும் மருத்துவரை பாராட்ட வேண்டும்.

பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என சராசரி வாழ்க்கை வாழாமல் பிறந்த வாழ்க்கையில் அர்த்தம் உள்ள வகையில் சுவடு பதிக்கும் வகையில் மிகச் சிறந்த நூலை படைத்து இருக்கிறார்.

இந்த நூலை படித்து முடித்தவுடன் நம்முள் ஒரு இரசாயண மாற்றம் நிகழ்கின்றது என்பது முற்றிலும் உண்மை. நூலை வாங்கிப் பார்த்தால் நான் சொன்னது உண்மை என்பதை நீங்களும் உணருவீர்கள். இது போன்ற தரமான ஆய்வு நூல்களை படைக்க படைப்பாளிகள் முன் வரவேண்டும். இந்நூல் சமுதாயத்தை நெறிப்படுத்தும், மனிதம் போதிக்கும் வாழ்வின் அர்த்தம் விளக்கும். இதுபோன்ற தரமான நூல்களை மருத்துவர் தொடர்ந்து நல்க வேண்டும். நூலாசிரியர் மருத்துவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *