திருவாரூர் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை, ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகை உள்ளிட்ட பணப்பலன்களை மீண்டும் வழங்கிட வேண்டும். ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழு மூலம் குறைவான ஊதியம் பெறும் இடைநிலை மற்றும் முதல் நிலை ஆசிரியர்களின் ஊதிய குறைபாட்டினை சமன் செய்ய வேண்டும். பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊர் புற நூலகர்கள், செவிலியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்கவேண்டும்.
அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். உயர் கல்வி படித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்ட வேலை நிறுத்த போராட்டத்தில் 2000 ஆசிரியர்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சிப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களும் பள்ளிகளும் போதிய பணியாளர்கள் இன்றி செயல்பட்டது. இந்த வேலை நிறுத்தத்தை முன்னிட்டு திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஈவேரா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அரசு அலுவலக உதவியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் சங்க அமைப்பு செயலாளர் மோகன், மேல்நிலை நீர் தேக்க தொட்டி மாவட்ட செயலாளர் டேவிட் சத்தியநாதன், தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சரவணன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், வட்டாரச் செயலாளர்கள் சந்திரமோகன், பிரகாஷ், சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக திருவாரூர் வட்டாரச் செயலாளர் வேதமூர்த்தி வரவேற்றார். இறுதியில் குடவாசல் வட்டாரச் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்