வலங்கைமான் மற்றும் ஆலங்குடியில் நன்னிலம் டி எஸ் பி சரவணகுமார் தலைமையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தனரின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.
இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடத்துவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக தமிழகத்திற்கு ஏப்ரல் 19 இல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் 100% வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் விதமாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர் கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்குவது, ரங்கோலி கோலம் இடுவது, விழிப்புணர்வு பேரணி நடத்துவது என பல்வேறு முன்னெடுப்பு பணிகளை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு கட்டமாக 29- நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி, 169- நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் பகுதியில் நன்னிலம் டிஎஸ்பி சரவணகுமார் தலைமையில், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி முன்னிலையில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி 100% வாக்களிக்கவும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், பாதுகாப்பு தொடர்பாக மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த கொடி அணி வகுப்பு நடைபெற்றது.
முன்னதாக கொடி அணி வகுப்பு பேரணி வலங்கைமான் மாரியம்மன் கோவில் அருகே உள்ள குடமுருட்டி பாலத்தில் இருந்து கடைவீதி வழியாக கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் வலங்கைமான் காவல் நிலையத்தை அடைந்தது. அதேபோன்று ஆலங்குடி கடைவீதி பகுதியிலும் கொடி அணிவிப்பு நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார்அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.