சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற இலக்கினை நோக்கி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, விழிப்புணர்வு இராட்சத பலூன் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்களால் சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் பறக்க விடப்பட்டது.

இந்நிகழ்வின் போது மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்திற்கு பாராளுமன்ற பொதுத்தேர்தல்–2024-ஐ ஒரே கட்டமாக தேர்தல் நடத்திடும் பொருட்டு, வருகின்ற ஏப்ரல்-19ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் தங்களது வாக்கினை பதிவு செய்திடும் பொருட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்களர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் சிவகங்கை பேருந்து நிலையம் அருகில், வாக்காளர்கள் எளிதில் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ள, இராட்சத பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது. இதேபோன்று, காரைக்குடி பகுதியிலும் இராட்சத பலூன் பறக்க விடப்படவுள்ளது.

மேலும், நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க உள்ள இளம்‌ வாக்காளர்கள், தங்களது வாக்குரிமையை நிலைநாட்டுகின்ற வகையில், அனைவரும் வருகின்ற ஏப்ரல்-19ஆம் தேதியன்று தவறாமல் வாக்களித்திட வேண்டும்.

     இதுபோன்று, பல்வேறு  விழிப்புணர்வு நிகழ்வுகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை அனைத்து வாக்காளர்களும் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024–ல் 100சதவீதம் வாக்களித்து, நமக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்புக்களை உணர்ந்து, தங்களது வாக்குரிமையை நிலைநாட்டி, ஜனநாயக கடமையாற்றிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட  ஆட்சித்தலைவர்                                                                       ஆஷா  அஜித்  தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (சிவகங்கை) திரு.விஜயகுமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் திருமதி மங்கையர்திலகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *