பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 – ஐ முன்னிட்டு,
வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு நிலைகளில் பணிகள் மேற்கொள்ளவுள்ள
அலுவலர்களுக்கான நடைபெற்ற , மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு மற்றும் அஞ்சல் வாக்குப்பதிவு செலுத்தும் பணி ஆகியன குறித்து,
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி ஆஷா அஜித், அவர்கள் மற்றும் பொது தேர்தல் பார்வையாளர் திரு.எஸ்.ஹரிஷ் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு,
ஆய்வு மேற்கொண்டு வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து , உரிய அறிவுரைகளை வழங்கினர்.
சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 – ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு நிலைகளில் பணிகள் மேற்கொள்ளவுள்ள அலுவலர்களுக்கான நடைபெற்ற மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு மற்றும் அஞ்சல் வாக்குப்பதிவு செலுத்தும் பணி ஆகியன குறித்து இன்றைய தினம் (13.04.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பொது தேர்தல் பார்வையாளர் திரு.எஸ்.ஹரிஷ், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மையங்களில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து உரிய அறிவுரைகளை வழங்கி தெரிவிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, தமிழகத்திற்கு ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல்-19ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 31-சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மண்டல அளவிலான அலுவலர்கள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோர், தங்களுக்கான பணிகளை மேற்கொள்வது குறித்து உரிய பயிற்சிகள் இரண்டு கட்டமாக முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புக்கள் நடைபெறுகிறது.
அதில், சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சிவகங்கையிலுள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியிலும், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு காரைக்குடியிலுள்ள மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு திருப்பத்தூரிலுள்ள ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியிலும் மற்றும் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மானாமதுரையிலுள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்புக்கள் நடைபெறுகிறது.இதில், வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள், நிலை-1 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும், நிலை – 2 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும், நிலை-3 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும், நிலை – 4 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கம் என மொத்தம் 6,679 அலுவலர்களுக்கு சட்டமன்றத் தொகுதி நிலை பயிற்சி அலுவலர்கள் மற்றும் 120 மண்டல அலுவலர்களால் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும், வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்குவதை கண்காணிக்க ஒவ்வொரு பயிற்சி மையத்துக்கும் மாவட்ட நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பாராளுமன்ற பொது தேர்தல்- 2024 தொடர்பாக வாக்குச்சாவடி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்கு ஏதுவாக, அந்தந்த பயிற்சி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அஞ்சல் வாக்குப்பதிவு சேவை மையம் (Facilitation Center) மூலம் வாக்குப்பதிவு மேற்கொள்ளும் பணியும் நடைபெற்று வருகிறது.
வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு நிலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள், தேர்தல் ஆணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளுக்குட்பட்டு மட்டுமே, தங்களுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி முகவர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் வாயிலாக உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளின் வாயிலாக தெரிவிக்கப்படும் அனைத்து விதிமுறைகளை அலுவலர்கள் முறையாகவும், முழுமையாகவும் அறிந்து கொள்ள வேண்டும்.தங்களுக்கான பணிகளில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், உடனடியாக அதனை நிவர்த்தி செய்து கொள்ளுதல் வேண்டும்.
முந்தைய தேர்தல் காலங்களில் தங்களுக்கான பணியினை சிறப்பாக மேற்கொண்டதைப் போல், தற்போதும் நடைபெறவுள்ள சிவகங்கை பாராளுமன்ற தேர்தலிலும், தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, சிறப்பான பணியினை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பொது தேர்தல் பார்வையாளர் திரு.எஸ்.ஹரிஷ்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வுகளில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி ஜெயமணி (மானாமதுரை), வட்டாட்சியர்கள் திரு.சிவராமன் (சிவகங்கை), திரு.ராஜா (மானாமதுரை) உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.