செய்தியாளர் முருகவேல் நெட்டப்பாக்கம்
புதுவை நெட்டப்பாக்கம் மெயின் ரோட்டில் சாக்கடை கழிவுநீர் பாய்வதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.

புதுவை பொதுப்பணித்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சாலைகளில் இது போன்ற கழிவுநீர் தேங்குவதால் சாலை விரைவில் பழுதடைந்து பயனற்றதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெட்டப்பாக்கம் நெசவாளர் குடியிருப்பு, கரியமாணிக்கம் பேட் பகுதி, ஏரிப்பாக்கம் பேட், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையோரம் பொதுப்பணி துறையினரால் கட்டப்பட்ட வாய்க்கால் வழியாக வந்து, பண்ட சோழநல்லூர் திரும்பும் சாலையோரம் உள்ள வாய்க்கால் வழியாக பண்டசோழநல்லூர் அருகே உள்ள தனியார் பெயிண்ட் கம்பெனி ஒட்டிய வாய்க்கால் வழியாக சென்று மலட்டாரை அடைய வேண்டும். ஆனால் இந்த வாய்க்கால் பல இடங்களில் அடைபட்டு தடைபட்டு இருப்பதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இப்போது நெட்டப்பாக்கம் புதுவை மெயின் ரோட்டில் தண்ணீர் தேங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் நெட்டப்பாக்கத்தில் இருந்து பண்டசோழநல்லூர் செல்லும் வாய்க்காலை விவசாயிகள் ஆக்கிரமித்து தடை ஏற்படுத்தியுள்ளது ஒரு காரணம். மேலும் பண்ட சோழநல்லூரை சேர்ந்தவர்கள், நெட்டப்பாக்கம் கரியமாணிக்கம் கழிவுநீர் இங்கு வரக்கூடாது என்று எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். இவை ஒருபுறம் இருக்க நெட்டப்பாக்கத்தில் இருந்து மேற்படி கழிவு நீரை வடக்கு பக்கம் குறவன் குடிசை வழியாக கொண்டு செல்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மண்ணைக் கொட்டி தடுப்பு ஏற்படுத்தி விட்டனர். இதனை சரி செய்ய முடியாத நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் புதுவை அரசு பொதுப்பணித்துறையினர், சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு செயலற்ற நிலையில் செய்வது அறியாது உள்ளனர். இதனால் பாதிக்கப்படுவது உள்ளூர்மக்கள் மட்டுமல்ல, பள்ளிக்கூட மாணவ மாணவியர்கள், நோயாளிகள், தொழிற்சாலைகளை பணி புரியும் தொழிலாளர்கள், வியாபாரிகள், வெளியூரில் இருந்து பயணம் செல்லக்கூடிய மக்கள் என அனைவருக்கும் பெரும் தலைவலியாக உள்ளது இந்த கழிவுநீர் ரோட்டில் பாயும் பிரச்சனை. ஆகவே புதுவை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்படி கழிவு நீர் வாய்க்காலை தங்கு தடை இன்றி மலட்டாறு வரை கொண்டுசெல்ல வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்