17.05.2024அரசு மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் இயங்க வேண்டுமென வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கத் துவக்கம்;
நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் 7708616040
நாகையில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் இயங்க வேண்டுமென வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கத் துவக்கம்; பலமுறை போராட்டம் நடத்தியும் உரிய தீர்வு இல்லை என கொந்தளித்த பொதுமக்கள், மண்ணை வாரி இறைத்து சாபம் விட்டதால் பரபரப்பு…
நாகை புதிய பேருந்து நிலையம் அருகாமையில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனை இயங்கி வந்தது. இந்நிலையில் ஒரத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இங்கிருந்து மருத்துவ சேவைகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் நாகை நகரை சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிய நிலையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் இதுவரை உரிய தீர்வு எட்டப்படாத நிலையில் சமூக ஆர்வலரான பாஸ்கரன் என்பவர், மாபெரும் கையெழுத்து இயக்கத்தை துவங்கி பொதுமக்களிடம் மீண்டும் அதே இடத்தில் அரசு மருத்துவமனையை இயக்க கோரி கையெழுத்து பெற்று அதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி ஈடுபட்டு வருகிறார். அதன்படி நாகை கம்மாளத்தெரு மருந்து கொத்தலைரோடு பகுதியில், பொதுமக்கள் மற்றும் அங்கிருந்த வணிகர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் அன்றாடம் தின கூலி செய்து வருவாய் ஈட்டும் பலரும் நாகை அரசு மருத்துவமனையை நம்பி இருந்த நிலையில் தற்போது, 14 கிலோமீட்டர் தூரம் உள்ள ஒரத்தூர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனால் நள்ளிரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்கு செல்ல முடியாத சூழல் இருப்பதாகவும்,நாகை மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர். ஏற்கனவே பலமுறை போராட்டங்களை நடத்தி இதுவரை தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் அதே இடத்தில் மருத்துவமனையை இயக்காவிட்டால் குடும்பத்தோடு, மருத்துவமனை முன்பாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் எனவும் எச்சரிக்கை விட்டுத்தனர். மேலும் ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் வகையில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மருத்துவமனையை இடமாற்றம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நல்லா இருக்க முடியாது என மண்ணை வாரி இறைத்து பெண்கள் சாபம் விட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.