பொள்ளாச்சி, ஜுன். 24- சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற நடுத்தர வர்க்கத்தினரின் கனவு நிறைவேற, நில வழிகாட்டு மதிப்பை குறைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மற்றும் நிலத் தரகர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மற்றும் நிலத்தரகர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி குமரன் நகரில் இன்று நடைபெற்றது.
சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஆர்.எம். அருள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் பஞ்சலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் ஸ்டார் ப்ரோமோட்டோர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் வெங்கட், சங்கத்தின் நிர்வாகிகள், கோவை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நிலத்தரகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஆர்.எம். அருள் கூறுகையில், மாவட்டத்தில் முதன்முறையாக ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மற்றும் நிலத்தரகர்கள் இணைந்து பரிவர்த்தனை செய்யும் ஒரு திட்டத்தை துவக்கி உள்ளோம்.
இதன் மூலம் நீளம் வாங்குவோர் மற்றும் வீடு கட்டுவோருக்கு அனைத்து பணிகளும் சுலபமாகும்.
தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது 3500 சதுர அடிக்கு குறைந்த அளவில் வீடு கட்டும் போது அனுமதி பெற தேவையில்லை என்று அறிவித்துள்ளார்கள். அதனை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
அதே சமயம் நில வழிகாட்டு மதிப்பை உயர்த்துவதை தவிர்த்தால் நடுத்தர வர்க்கத்தினரின் நிலம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்ற கனவு எளிதில் நிறைவேறும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.