தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாமணியாச்சி பைபாஸ் சாலையில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மாலைக்கார போத்தி திருக்கோயில் உள்ளது. இந்து – இஸ்லாம் மக்கள் என சமூக நல்லிணக்கத்தோடு அந்தக் கோவிலை வழிபட்டு வருகின்றனர்.
1815ம் ஆண்டு முதல் இந்த கோவில் அங்கு இருப்பதாக அங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றனர். இந்த கோவிலுக்கு என்று அரசு சார்பில் நான்கு சென்ட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அடிபம்பு அமைத்து தண்ணீர் வசதியும் அரசு சார்பில் செய்து தரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அந்த கோவில் மற்றும் அரசு சார்பில் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வருவதாக இனாம் மணியாச்சி கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பினை தடுக்கும்விதமாக பொதுமக்கள் கோவிலை சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர.
அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவில் மற்றும் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி தாசில்தார் சரவண பெருமாள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். கோவில் நிலம் குறித்து முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் சரவண பெருமாள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.