அரியலூர்:கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய உயிரிழப்பைக் கண்டித்து அரியலூர் அண்ணாசிலை முன்பு அதிமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளச்சாராய உயிழப்பைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி அரியலூர் பேருந்து நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பு மேடை அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட அதிமுக சார்பில் காவல் துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் மேடைக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, அண்ணாசிலை முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் கள்ளச்சராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசையும், கள்ளச்சாராயம் அருந்தி பலியாக காரணமாக இருந்த அதிகாரிகளையும் கண்டித்தும் அதிமுகவினர் முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் இளவரசன், முன்னாள் மாவட்டச் செயலர் இளவழகன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், நகரச் செயலர் ஏ.பி.செந்தில், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவைச் செயலர் ஒ.பி.சங்கர், இணைச் செயலர் நா.பிரேம்குமார், ஒன்றியச் செயலாளர்கள் செல்வராஜ், பாலசுப்பிரமணியன், வழக்குரைஞர் பிரிவு நிர்வாகிகள் வெங்கடாஜலபதி, செல்ல சுகுமார், ராமகோவிந்தராஜன், முன்னாள் அரசு வழக்குரைஞர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *