பொள்ளாச்சி, ஜூன். 26- குடியிருப்புகள் நிறைந்த கிராமத்திற்குள் செயல்படும் நார் தொழிற்சாலையால், உடல் உபாதைகளோடு இயற்கை ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கண்ணீர் மல்க புகார் தெரிவிக்கின்றனர்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிப்பட்டி ஊராட்சியில் ஏராளமான நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் விவசாய நிலப் பகுதிகளிலேயே செயல்பட்டு வருகின்றன.
ஆனால் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நாட் தொழிற்சாலை அமைத்து செயல்படுத்தி வருவது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கள்ளிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் என்பவர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். இது குறித்து விஷ்ணுவர்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கள்ளிப்பட்டி ஊராட்சியில் 70க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்குள், கள்ளிப்பட்டி புதூரைச் சேர்ந்த
திருவேங்கடம் என்பவர், தென்னை நார் தொழிற்சாலை அமைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்த தொழிற்சாலை குடியிருப்பு பகுதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளதால், இதில் இருந்து வெளிவரும் மஞ்சி மற்றும் மஞ்சி துகள்கள் காற்றில்
கலந்து முற்றிலும் மாசு அடையச் செய்துள்ளது.
இதனால் எங்கள் ஊரில் வசிக்கும் பெரும்பாலானவர்களுக்குக்கு பல்வேறு வகையான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகிறது. குறிப்பாக சுவாச கோளாறு, இருமல், தும்மல், கண் எரிச்சல், தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மிகக் குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளே அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் மேலும், மஞ்சி துகள்கள் தண்ணீர் தொட்டிகளில் விழுவதால் மனிதர்கள் மட்டுமின்றி, கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன.
மேற்கண்ட தொழிற்சாலையில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், விவசாய பூமிக்குள் தேங்குவதால் கொசுக்கள் அதிக அளவில் உருவாகி டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்களால், கிராமத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.
நார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், நேரடியாக விவசாய நிலத்தில் கலப்பதால் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் உள்ள குடிநீர் மாசடைகிறது.
இந்நீரால் விவசாயம் முற்றிலும் பாதிப்படைகிறது. விவசாய சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது.
எனவே, இங்குள்ள விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற, குடியிருப்பு பகுதிக்குள் செயல்பட்டு வரும் இந்த நார் தொழிற்சாலையை உடனடியாக அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும்.
இந்த விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனமாக இருந்தால் கிராம மக்கள் ஒன்று திரண்டு பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.