செங்குன்றம் செய்தியாளர்
புழலில் மார்க்கெட் வணிக வளாகங்கள் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை திருடி அதன் பாகங்களை உதிரியாக தனித்தனியாக கழற்றி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
புழல் காவாங்கரை சந்திப்பு சாலை அருகே மீன் மார்க்கெட் அமைந்துள்ளது இங்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் வாகனங்கள் அவ்வப்போது திருடு போவதாக புழல் காவல் நிலையத்திற்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.
இது போன்ற குற்றசெயலை உடனே தடுக்கவும் குற்றவாளியை விரைந்து பிடிக்கவும் புழல் சரக உதவி கமிஷனர் சகாதேவன் உத்திரவு பிறப்பித்தார்.
அதன்படி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து ஆராய்ந்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை மீன் மார்க்கெட் அருகே சந்தேகமாக கையில் பையுடன் திரிந்த நபரை போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர் . அந்த நபர் மாற்று சாவிகளை கொத்தாக கையில் வைத்துக் கொண்டுகொண்டு ஒவ்வொரு இருசக்கர வாகனத்தையும் சாவி மூலமாக திறந்து திருட முயற்சித்தார் .
அப்போது பின்தொடர்ந்தது இவரை கண்காணித்த போலீசார் லாவகமாக அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது .
போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் , செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 37 ) எனவும்
இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று பல பகுதிகளில் இருந்தும் மீன் வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகனத்தில் மீன் மார்க்கெட் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மீன் வாங்க சென்று விடுவார்கள்.
அவர்கள் உள்ளே சென்றதும் தனது கள்ளச் சாவி மூலம் இருசக்கர வாகனத்தை திருடி ஓட்டிச் சென்று இவரது வீட்டிலேயே வாகனத்தில் உள்ள உதிரி பாகங்களை தனித்தனியே கழற்றி காயலான் கடைக்கு விற்று அதில் வருகின்ற பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்தும் உல்லாசமாக வாழ்க்கையை ஓட்டியும் வருவது தெரிய வந்தது.
பின்னர் இவரது வீட்டிற்கு சென்று சோதனையிட்ட புழல் காவல் நிலைய போலீசார் இவரது வீட்டில் இருந்த 15 இருசக்கர வாகன இன்ஜின் களையும் 16 சேஸ் பிரேமையும் பறிமுதல் செய்தனர்.
அதன்பின் முருகன் மீது புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புகாரி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். பழைய பொருட்களை வாங்கும் வியாபாரிகள் இன்ஜினில் பதிவு செய்யப்பட்டுள்ள நம்பர் இருந்ததால் அது விலை போகாமல் இவரது வீட்டில் இருப்பு வைத்ததாக தெரிய வந்தது. மேலும் இவர் ஹோண்டா சிட்டி, யூனிகான் போன்ற வாகனங்களை திருடிய சம்பவத்தில் தாம்பரம் பள்ளிக்கரணை உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் சிறை சென்று வந்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.