திருவாரூரில் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொது சொத்தை பட்டா மாற்றி அபகரிப்பில் ஈடுபட்டுள்ள மாங்குடி திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மாங்குடி ஊராட்சியில்
கடந்த 2001-ஆம் ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக பவானி அம்மாள் என்பவர் 3000 சதுர அடி நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். அங்கு செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் 2010-ஆம் ஆண்டிலிருந்து செயல்படாத நிலையில் கட்டிடம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் தற்பொழுது அந்த ஊராட்சியில் திமுகவை சேர்ந்த சித்ரா குருநாதன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போது ரூ. 1 கோடி மதிப்புள்ள தானமாக தரப்பட்ட அந்த நிலத்தை வேல்முருகன் என்பவரது பெயருக்கு சித்ரா குருநாதன் பட்டா மாற்றம் செய்து விற்பனை செய்வதற்கு முயற்சி செய்து வருகிறார்.

இதனை கண்டித்து இன்றைய தினம் மாங்குடி கடைவீதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் அதிமுக நகர கழக செயலாளர் ஆர்.டி. மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுகவினர் பங்கேற்று அந்த இடத்தில் மீண்டும் மருத்துவமனை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் பி.கே.யு. மணிகண்டன், செந்தில்வேல், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *