புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு கொம்யூனில் உள்ள செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கி வரும் அரசின் விவசாயக் கல்லூரியான பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வேளாண் இளங்கலை பட்டப்படிப்பு பயிலுவதற்காக சேர்ந்த முதலாம் ஆண்டு படிக்கும் 48 மாணவிகள் மற்றும் 33 மாணவர்கள் வேளாண் விரிவாக்கத்தின் அடிப்படைகள் என்ற பாடத்திட்டத்தை இணை பேராசிரியர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார் தலைமையில் பயின்று வருகின்றனர்.
அதன் ஒரு அங்கமாக தமிழ்நாடு மாநிலத்தின் நாகை மாவட்டத்தில் விழுந்தமாவடி ஊராட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அதன் பிரதிநிதிகள் பற்றி பயிற்சி மேற்கொண்டனர்.
முனைவர் அனந்த்குமார் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து பேசுகையில் தொழில்நுட்பங்களை கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் நேரடியாக கொண்டு சேர்க்க வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் தனித்தனியே அணுகுவதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் பஞ்சாயத்தார் வழியே தொடர்புகொள்ளும் போது பலரை விரைவாக சென்றடைய உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய ஞானம் பாடத்திட்டப் படி மாணவ மாணவியருக்கு அவசியம் என்றார்.
ஊராட்சி மன்ற தலைவர் ந. மகாலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அவர் பேசும் போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வேண்டும். செயல்படாத அல்லது தவறு செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். கிராம சபையின் அனைத்து தீர்மானங்களும் அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும். உரிய நேரத்தில் ஊராட்சியின் தேவைகளை அரசு உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டும். சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு போதிய ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
கிராம நிர்வாக அலுவலர் த. வெங்கடாசலம், ஊராட்சி செயலாளர் க. ராஜகுரு, தலைமை நாட்டாமை ஆ. பூமாலை, நாட்டாமை ச. பாலசுப்பிரமணியம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் உ. ராமன் ஆகியோர் அவரவர் பொறுப்பில் மாணவ மாணவியருக்கு உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த முனைவர் குமரவேல் நிகழ்ச்சி நடைபெற ஒருங்கிணைப்பு செய்து தந்தார்.
முன்னதாக மாணவி மோகனப்பிரியா அனைவரையும் வரவேற்றார். இறுதியில் மாணவர் தணிகை நன்றியுரைத்தார். மாணவர் ரேகாடி முகேஷ் வர்மா நிகழ்ச்சியை ஆவணமாக்கினார்.