ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850- வழங்க வேண்டும்! ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டக்கிளை சார்பாக அனைத்து துறை ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம் சேத்தூர் சேவபாண்டிய அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து கிளைத்தலைவர் ராஜகுமார் தலைமையில் நடைபெற்றது. வட்டக்கிளை துணைத்தலைவர் பெருமாள் சாமி வரவேற்புரை ஆற்றினார். வட்டக்கிளை செயலாளர் திருமலை செயல் அறிக்கையை வாசித்தார்.வட்ட கிளை பொருளாளர் கா. பாண்டியன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் சத்துணவு சங்க மாவட்ட பொருளாளர் முத்து வெள்ளையப்பன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் சங்க நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர். கடந்த ஆண்டு உள்ள நிர்வாகிகளே இந்த ஆண்டுக்கும் செயல்படுவதற்கு அனைத்து உறுப்பினர்களால் ஒப்புதல் பெறப்பட்டது. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலர்கள், வனத்துறை காவலர்கள் ஆகிய அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7850- வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 6-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொள்ளவும், ஆகஸ்ட் 10ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள சத்துணவு அங்கன்வாடி ஓய்வு பெற்ற ஊழியர்களின் மாநில மாநாட்டிற்கு கலந்து கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. இணைச் செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.