சிவகங்கையில் நேரடி நெல் கொள்முதல் பணியாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு, 8அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பணியாளர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்திடவும், பருவ கால பணியாளர்களைக் கொண்டு காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டியும், நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கை குறைப்பதை கைவிடக் கோரியும், பணி நிரந்தரம், பணி உயர்வில் உள்ள குளறுபடிகளை கலைந்திடக் கோரியும், நவீன அரிசி ஆலையை மேலும் நவீன முறையில் மேம்படுத்த கோரியும், கழகப் பணியாளர்களுக்கு ரூ9000 ஓய்வூதியம் வழங்க கோரியும், கொள்முதல் பணியாளர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தங்களின் 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் 20 ம் தேதி கையெழுத்து இயக்கமும், 30ஆம் தேதி சென்னையில் மாநில தழுவிய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற உள்ளதாக பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.