பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் சாதனை படைக்க பாஜக நிர்வாகி வாழ்த்து
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் மாநில தலைவர் மு. லட்சுமி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில், நாளை (26-7-2024) தொடங்குகிறது.
உலகமே உற்றுநோக்கியுள்ள இந்தத் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில் இருந்து 117 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
கடந்த 2014- ம் ஆண்டு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்த பிறகு, விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் கனவு திட்டமான ‘கேலோ இந்தியா’ திட்டம் விளையாட்டுத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக கடந்த 2020 டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அணி 7 பதக்கங்களை வென்றது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
நாளை தொங்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி மிகவும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
அவர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைக்க பாஜக புதுச்சேரி மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு பிரிவு சார்பில் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.