மயிலாடுதுறை அருகே ஆக்கூரில் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா; பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் விருது பெற்ற ஆசிரியரை ஊர்வலமாக அழைத்து வந்து மரியாதை செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் மணிமேகலை. இவர் இப்பள்ளியில் கடந்த 9 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளி கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 98 விழுக்காடு தேர்ச்சியை அடைந்துள்ளது.

இந்நிலையில் தலைமை ஆசிரியை மணிமேகலைக்கு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியை விருது வழங்கப்பட்டது. இதனை இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினர். ஆக்கூர் கடை வீதியில் தலைமை ஆசிரியை மணிமேகலை அவரது கணவர் குணசேகரன் ஆகியோருக்கு மாலை அணிவித்த ஆசிரியர்கள் அவர்களை ஊர்வலமாக பள்ளியை நோக்கி அழைத்து வந்தனர்.
வழியெங்கும் மாணவிகள் டிரம்ஸ் இசை ஒலிக்க உற்சாக நடனத்துடன் தங்கள் தலைமை ஆசிரியையை பள்ளிக்கு அழைத்து வந்து கரகோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர் சந்திரமோகன், துணை தலைவர் ஜெ.சிங்காரவேலு,ஊராட்சி மன்ற. உறுப்பினர்கள், தனியார் பள்ளி முதல்வர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.