காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி துறையின் மூலம் மத்திய அரசின் திட்டமான “ஸ்விச்சிதா ஹை சேவா” என்ற திட்டத்தின் மூலம் திருப்பட்டினம் கொம்யூன் கீழையூர் பஞ்சாயத்தை சேர்ந்த பட்டினச்சேரியில் அமைந்துள்ள மீனவ கிராமத்தில் அரசு ஊரக வளர்ச்சி இயக்கம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் திருப்பட்டினம் கொம்யூன்பஞ்சாயத்தும் இணைந்து இன்று காலை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முனைவர் திரு. மணிகண்டன் இ ஆ ப அவர்கள் தலைமையில் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் மற்றும் வட்டார வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சுய உதவி குழுவைச் சேர்ந்த மகளிர் ஒன்றினைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வினை துவக்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறுகையில் இத்திட்டம் சிறப்பான திட்டம் என்றும் இதன் மூலம் உங்கள் ஊர்களை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும் என்றும் கூறிய ஆட்சியர் அவர்கள் குறிப்பாக மாணவ மாணவிகள் இதை நன்கு உணர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் வளர தூய்மை முக்கிய நிகழ்வாகும் என்றும் நோய் நொடி ஏற்பட்டால் படிப்பு பாதிக்கப்படும் என்றும் கூறிய ஆட்சியர் அவர்கள் குழந்தைகள் எச்சிலை துப்புவது மற்றும் சாக்லேட் போன்ற பேப்பர்களை கீழே போடுவது உள்ளிட்ட செயல்களை பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் கடலோரப் பகுதிகளில் குப்பைகளை அதிகம் கொட்டுவதால் கடல்கள் மாசு ஏற்ப்பட்டு வருகின்றன என்றும் கடலில் இருக்கும் அசுத்தத்தால் உங்கள் மீன் பிடித்தல் தொழில் எதிர்காலத்தில் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொண்டு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் தூய்மையான புதுச்சேரி தூய்மையான காரைக்காலை நீங்கள் உருவாக்க முன் வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள். குறிப்பாக கடலோரப் பகுதிகள் மாசுபடுவதை முற்றிலும் நீங்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்கள். மேலும் தூய்மை சம்பந்தமாக ஆட்சியர் அவர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மகளிர் மத்திய அரசின் உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்கள்.
இறுதியில் பேசிய ஆட்சியர் அவர்கள் இந்த உறுதிமொழி மூலமாக நீங்கள் நடக்க வேண்டும் எனவும் குழந்தைகளுக்கு முக்கியமாக இதை எல்லாம் சொல்லித் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில்நாதன் மேலும் இணை வட்டார வளர்ச்சி அதிகாரி திரு ரெங்கநாதன் ஒருங்கிணைப்பாளர் திரு. பாலு (என்கிற ) பக்கிரிசாமி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் திரு. கண்ணப்பன் ஊர் மீனவ பஞ்சாயத்தார்கள், மீனவ பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தூய்மை பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் அப்பகுதியில் அமைந்துள்ள நூலகத்திற்கு JEE நுழைவுத் தேர்விற்கு தேவையான புத்தகங்களை மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள்.