திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நெடுஞ்சாலைத் துறையினர் வனப்பரப்பை சமன் செய்ய தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை செயலாளர் மற்றும் தலைமை பொறியாளர் (நெ) க (ம) நடைபெற்ற பணிகள் தொடர்பான ஆய்வக கூட்டத்தில் தெரிவித்த ஆலோசனையின் படி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் செந்தில் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், வலங்கைமான் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மற்றும் உட்கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி,சாலை ஓரம் மரம், மின்விளக்கு கம்பங்கள் ஆகியவற்றுக்கு வர்ணம் பூசும் பணி,மழைநீர் வடிகால் சீர் செய்யும் பணி, வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணி,சிறு பாலங்கள் குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து,நீர்வழிப் பாதைகளை தங்கு தடையின்றி நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேலும் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படாத வகையில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் விதமாக சாலை ஓரங்களில் உள்ள மரம் மற்றும் மின்சாரம் கம்பங்களுக்கு ஒளிரும் பட்டைகள் பொருத்தும் பணி நடைபெற்றது. தற்போது கும்பகோணம்- மன்னார்குடி- அதிராம்பட்டினம் சாலையில் வனப்பரப்பை சமநிலை செய்யும் நோக்கோடு சாலை ஓரங்களில் பெரிய அளவிலான மரக்கன்றுகள் நட்டு கூண்டுகள் அமைத்து பராமரித்து வருகிறது. கோட்ட பொறியாளர் இளம்வழுதி உத்தரவின் பேரில் குடவாசல் உதவி கோட்ட பொறியாளர் சரவணன் மற்றும் வலங்கைமான் இளநிலை பொறியாளர் நவீன்குமார் ஆகியோரின் மேற் பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சாலை ஆய்வாளர் மற்றும் சாலை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.