ராஜபாளையம் நகர் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய விவசாய தொகுப்புகளில் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் யானை கூட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
வனத்துறையினர் யானைகளை விரட்டாமல் வேடிக்கை பார்ப்பதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு யானைகளால் பயிர் சேதம் அதிகரித்து வருகிறது.
அணைத் தலை விநாயகர் கோவிலில் இருந்து கல்லாறு ஆற்றுப் பாதையில் ஜெயக்குமார், ரமணா, முருகேசன் ராஜா, சுப்பிரமணியன், முருகன் உள்ளிட்ட ஏராளமான சிறு குறு விவசாயிகள் 500 ஏக்கருக்கும் அதிகமான அளவில் மா, பலா, தென்னை வாழை உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைக்கு அடுத்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன் யானைகள் பலா மரங்களை சேதம் ஏற்படுத்தின.
கடந்த மூன்று நாட்களாக நான்கு யானைகள் கொண்ட கூட்டம் இரவு நேரங்களில் தென்னை வாழை மா மரங்களை சேதப்படுத்த துவங்கியுள்ளன.
இது குறித்து வனத்துறை இடம் தகவல் தெரிவித்தும் தகுந்த நடவடிக்கை இல்லாததால் விவசாயிகள் செய்வதறியாது தவிப்பில் உள்ளனர்.
விவசாயி வெங்கடேசன்: பல தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மலையடிவாரத்தை விட்டு தொலைவில் உள்ள இங்கு யானைகள் தொந்தரவு இருந்ததில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் முதல்முறையாக யானைகள் வரத்து தொடங்கி தற்போது சுற்றுப்பகுதி தோப்புகளில் 200 வாழை, ஐம்பதுக்கு மேற்பட்ட தென்னை, மா மரங்களை சேதப்படுத்தி வருகிறது.
தென்னைமர குருத்துகளை பிடுங்கியும், மா மர கிளைகளை ஒடித்தும், வாழை மரங்களை முழுவதுமாக சேதப்படுத்தியுள்ளது. பிரச்சனைகள் தொடங்கியதும் விவசாயிகள் குழுவாக சேர்ந்து இரவு நேர காவல் காத்தும் யானைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கனவே மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் யானைகளுக்கு விபத்து ஏற்பட்டு விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்படுமோ என்ற பதட்டம் உள்ளது. ஆற்றுப் புதர்களில் முகாமிட்டு சேதத்தை ஏற்படுத்தி வரும் காட்டு யானைகளை மலைப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது