விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3000 ஹெக்டருக்கு மேற்பட்ட பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தரணி சர்க்கரை ஆலை துவக்கப்பட்டு இப்பகுதி நெல் பரப்பை விட கரும்பு பயிர் சாகுபடி பரப்பு அதிக அளவில் பயிரிட்டு கரும்பாலைக்கு அனுப்பி வைத்து வந்தனர்.
உரிய முறையில் பணம் தராதது, காலதாமதம் செய்து கரும்பை கொள்முதல் செய்வது போன்ற காரணங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் நிர்வாக கோளாறுகள் காரணமாக தரணி சர்க்கரை ஆலை இழுத்து மூடப்பட்டது. கரும்பு கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யாததால் பெரிதும் பாதிக்கப்பட்டு வேறு விவசாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்தும் இன்றளவும் ஓரளவு விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். இந்த கரும்பை சிவகங்கை, அலங்காநல்லூர் உள்பட வேறு மாவட்டங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பை அனுப்பி வைத்து அதிக அளவில் செலவும், குறைந்த வருமானமும் ஈட்டி வருகின்றனர்.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் கரும்பு சாகுபடி முற்றிலும் அழியும் அபாயத்தில் ராஜபாளையம் கரும்பு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு அரசு ஒரு விரைவில் முடிவு எடுத்து தரணி சர்க்கரை ஆலையை அரசே எடுத்து நடத்தி கரும்பு கொள்முதல், அரவை செய்து விவசாயிகளுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து தரும்படி கரும்பு விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.