பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்தியூர், துங்கபுரம், பெரியவெண்மணி கிராமங்களில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட புதிய நியாயவிலைக்கடைகள், பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி நிறுத்தம் உள்ளிட்ட ரூ.44 லட்சம் மதிப்பிலான கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு மக்கள் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அத்தியூர் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
பின்னர், துங்கபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிதிவண்டி நிறுத்தும் கூடம் மற்றும் மாணவியர்களின் கழிப்பிட கட்டிடத்தையும், பெரியவெண்மணி கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையினையும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்து தூய்மை பணியாளர்களுக்கும் , பொதுமக்களுக்கும் உணவுப் பொருட்கள் விநியோகத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் மாணவ மாணவிகளிடையே உரையாற்றிய சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், “மாணவ மாணவிகள் அனைவரும் நல்ல முறையில் கல்வி பயின்று சமுதாயத்தில் சிறந்தவர்களாக உயர வேண்டும், கல்வி ஒன்று தான் நம்மிடம் இருந்து யாரும் பிரித்து எடுக்க முடியாத சொத்து, கல்விதான் நம்மை நல்ல வழியில் வழிநடத்தக்கூடிய உற்ற நண்பன் எனவே அனைவரும் எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்பதை விட்டு விடாமல் நன்கு படித்து வாழ்வில் முன்னேற மனமார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சுந்தரராமன், வேப்பூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமதி செல்வராணி வரதராஜன், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் திருமதி இளஞ்செல்வி, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.செல்வகுமார், திருமதி பூங்கொடி மற்றும் மாவட்ட து.செயலாளர் அ. மணிமாறன், அத்தியூர் கிளைச் செயலாளர் த.ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.