வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு, மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து கடைவீதி ஸ்ரீ கோதண்டராமசாமி கோயில் வரை குண்டும் குழியுமான ஒரு வழி சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து நடு நாராசம் ரோடு, வடக்கு அக்ரஹாரம் வழியாக கடைத்தெரு ஸ்ரீ கோதண்ட ராமசாமி கோவில் பேருந்து நிறுத்தம் வரை ஒரு வழிச்சாலையாக பயன்படுத்தப்படுகிறது. இச்சாலை மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து வடக்கு அக்ரஹாரம் வரை உள்ள நடுநாராசம் ரோடு வலங்கைமான் பேரூராட்சி சாலையில் உள்ளது, வடக்கு அக்ரஹாரம் பகுதி நெடுஞ்சாலை துறை சாலையில் உள்ளது. இச் சாலையில் கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பேராவூரணி போன்ற ஊர்களுக்கு பேருந்துகளும், சரக்கு வாகனங்களும், கார்கள், இருசக்கர வாகனங்கள் செல்கின்றனர். இதைத் தவிர பள்ளிகள், மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம், நீதிமன்றம், அஞ்சல் நிலையம் ஆகியவற்றிற்கு செல்லும் பொதுமக்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் செல்லும் முக்கிய சாலை ஆகும். இச்சாலை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. அதாவது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த சாலையில் பல இடங்களில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், பேருந்து மற்றும் கனரக வாகனங்கள், கார் இந்த சாலையில் சிக்கி அவதிப்படுகின்றனர். எனவே தொடர்மழை ஆரம்பிப்பதற்கு முன்பே சாலையில் தேங்கும் தண்ணீர் வடிவதற்கு வழி செய்து, சாலையில் உள்ள பள்ளங்களை ஜல்லிக்கற்கள் செம்மண் கலந்து நிரப்பி சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.