திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் முற்றிலும் பழுதடைந்ததை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து விருப்பாச்சிபுரம் ஊராட்சிக்கு புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது.
கட்டுமான பணிகள் முடிவுற்ற நிலையில், நேற்று ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா சிவகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வலங்கைமான் ஒன்றிய குழு தலைவர் குமாரமங்கலம் கே. சங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செந்தில் முன்னிலையில் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுஜிதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகர், சரவணன் மற்றும் ராயல் திருநாவுக்கரசு உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்னகரம் சாமிநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.