ராஜபாளையத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கொட்டும் மழையிலும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் தமிழக அரசு திட்டங்களில் சீரிய திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் ராஜபாளையம் பகுதியில் ஒரு நாள் முழுவதும் அதிகாரிகளுடன் கொட்டும் மழையிலும் ஆய்வு நடத்திவருகிறார் வேளாண்மை மையத்தில் பேட்டரி விசைத் தெளிப்பான் இரண்டு விவசாயிகளுக்கு வழங்கினார். தோட்டக்கலை துறை சார்பில் வெண்டை விதைகளையும் அதற்குரிய நுண்ணுயிர் உரங்களையும் விவசாயிகளுக்கு வழங்கினார். தொடர்ச்சியாக வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் பயிரிட்டு உள்ள பயிர்களின் விவரம், பயிர்களின் வளர்ச்சி குறித்து வேளாண்மை துறை உதவி இயக்குனர் திருமலை சாமி மற்றும் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் முத்துலட்சுமி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறினார்கள்.
தொடர்ச்சியாக ராஜபாளையம் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாய விலை கடைகளுக்கு சென்று அரிசியின் தரம், இருப்பு பராமரிப்பு உட்பட விவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தொடர்ந்து ராஜபாளையம் சுகாதார மையத்தை பார்வையிட்டு அங்கு நடைபெறும் மருத்துவ முகாம்கள், அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் போன்றவைகளை ஆய்வு செய்து முகாமின் விபரங்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் ஊட்டச்சத்து போன்றவை குறித்து ஆய்வு நடத்தினார்.
மாவட்ட ஆட்சியருடன் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், நகராட்சி ஆணையாளர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.