விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் மேலராஜகுலராமன் ஊராட்சி அய்யனாபுரம் கிராமத்தில் முனியாண்டி கோயில் ஊரணி உள்ளது. இந்த ஊரணி கரையை அதே ஊரில் உள்ள ஒரு சமூகத்தினர் ஆக்கிரமித்து நடை பாதை இல்லாமல் வைத்துள்ளனர்.

இந்நிலையில் மக்கள் சென்று வருவதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் குறைந்தபட்சம் 4 அடி நடைபாதை விட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய குழு சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட வருவாய் துறை காவல் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காலை முதல் மாலை வரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ராஜபாளையம் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் வடக்கு காவல் ஆய்வாளர்
அசோக்பாபு கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் உள்பட அரசு அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடங்கினார்கள்.
அது சமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில் ஒரு பிரிவினர் ஜேசிபி வாகனங்களை வழிமறித்தும், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தும் மறியல் போராட்டம் நடத்தினார்கள். ஏற்கனவே அறிவிப்பு கொடுத்தபடி ஆக்கிரமிப்பு களை அகற்ற ஏற்பாடு செய்த போது மறியல் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது குறித்து காவல்துறை அதிகாரிகளை தொடர்ந்து மீறி செயல்பட்டதால் முனியாண்டி உள்பட 18 பேரை ராஜபாளையம் வடக்கு போலீசார் கைது செய்து ராஜபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அப்பகுதியில் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து எஸ்.ராமலிங்கபுரம், சிவகாமிபுரம் பகுதியில் இரு தரப்பினருமே செய்திருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வருவாய் துறை காவல்துறையினர் சென்றபோது அவர்களும் இரு தரப்பினருமே வாக்குவாதம் செய்து மறித்தனர். இது குறித்து வரும் புதன்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்துவிட்டு அரசு அதிகாரிகள் திரும்பினார்கள். சம்பவங்கள் காரணமாக ராஜபாளையம் கிழக்கு பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.