திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர் காமராஜ் எம்எல்ஏ வலங்கைமான் ஒன்றியத்தில் மாணிக்கமங்கலம், குச்சிப்பாளையம், அரையூர், கொட்டையூர், நரிக்குடி, பாப்பாக்குடி, பண்டித சோழநல்லூர், நல்லம்பூர், நரசிங்கமங்கலம், மாத்தூர், ஆவூர், கோவிந்தகுடி, வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் கோவில்பத்து உள்ளிட்ட இடங்களில் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிய வைக்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தது.தற்போது பெய்த மழையினால் இளம் நெற்பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததே காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் மாவட்டத்தில் பல பகுதிகளில் தொகுப்பு வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுவதாகும் புகார் எழுகிறது. எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு தொகுப்பு வீடுகளை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆய்வின் போது வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான குமாரமங்கலம் கே. சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ.இளவரசன், வலங்கைமான் நகர செயலாளர் சா. குணசேகரன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஜெய. இளங்கோவன், நகர அவைத் தலைவர் ரத்தினகுமார், மாவட்ட பிரதிநிதி எஸ்.மூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.