கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆங்கில வழி ஆய்வு இல்லாமல் தமிழில் ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே, திருப்பனந்தாள் வட்டத்தில் உள்ள 9 ஊராட்சியில் 2 கோடியே 23 லட்சம் செலவில் கட்டப்பட்ட 9 கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்த அவர், கல்லூரிகளுக்கு மாவட்ட அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை என்ற செய்தி பரவலான கருத்தாக இருந்தாலும் கூட, அந்தந்த பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் உரியத் தொகை, உரிய தேவைக்கேற்ப வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அங்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது. தேவையான கோரிக்கைகள், தேவையான வகையில் செய்து முடிப்பதற்கான பணிகளை உயர்கல்வித்சதுறை மேற்கொண்டு வருகின்றோம். இன்னும் பல கல்வி முன்னேற்றங்களை கொண்டு வருவதற்கான பணிகளை அக்கறையோடு செயல்பட்டு வருகின்றோம்.
இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் எல்லாம் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த் துறையை தவிர பெரும்பாலும் ஆங்கில வழியில்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆய்வுகளை தமிழில் மேற்கொள்ளலாம் என கேட்டால் பல்கலைக்கழக நிர்வாகம், கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்குகிறது.
தமிழுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழக முதல்வர், மாணவர்களின் கோரிக்கையான ஆங்கில ஆய்வில்லாமல், தமிழில் கேட்டால், அதற்கான அனுமதியையும் உயர்கல்வித்துறை மூலம் கல்லூரிகளில் பல்கலைக்கழகத்தால் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.