வலங்கைமான் பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் சந்தன வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள குழாய் மதகு பழுதடைந்த நிலையில் அப்பகுதியில் புதிய மதகு பாலம் கட்டித் தர பேரூராட்சி மன்ற உறுப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு லாயம் பகுதியில் வலங்கைமான்- பாபநாசம் சாலையின் தெற்கே சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இவர்கள் சந்தன வாய்க்காலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட குழாய் மதகினை கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. குழாய் மதகு தற்போது பழுதடைந்தும், அகலம் குறைவாகவும் உள்ளது.
இதனால் கட்டுமானப் பணி உள்ளிட்டவைகளுக்கு பொருட்கள் எடுத்து சொல்வதற்கு வாகனங்கள் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் சந்தன வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் விட்டம் குறைவாக இருப்பதால் அவ்வப்போது குப்பைகள் தேங்கி பாசனத்துக்கு தண்ணீர் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. இக்குறைகளை களைய பழுதடைந்த குழாய் மதகினை எடுத்துவிட்டு புதிய பெரிய பாலம் கட்டித் தர வேண்டும் என 1-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் செல்வமணி மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.