புதுச்சேரியில், இண்டிகோ நிறுவனம் மூலம் மீண்டும் விமான சேவையை தொடங்க, புதுச்சேரி அரசு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெங்களூருவில் இருந்து 74 பயணிகளுடன் புதுச்சேரிக்கு வந்தடைந்த விமானத்தின் மீது இரு பக்கமும் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

துணைநிலை ஆளுநர் கு. கைலாஷ்நாதன், முதலமைச்சர் ந. ரங்கசாமி ஆகியோர் விமான சேவையைத் தொடங்கி வைத்து பயணிகளை மலர்க்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, 63 பயணிகளுடன் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத்திற்கு சென்ற விமானத்தை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தனர்.

ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் A.K. சாய் ஜெ.சரவணன்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் P.M.L. கல்யாணசுந்தரம், மு. வைத்தியநாதன், தலைமைச் செயலர் சரத் சவுகான் அரசுச் செயலர் (சுற்றுலா) ஜெயந்த குமார் ரே சுற்றுலாத்துறை இயக்குனர் முரளிதரன், புதுச்சேரி விமான நிலைய இயக்குனர் ராஜசேகரரெட்டி மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில்‌ விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டதையடுத்து தினசரி காலை, 11:10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மதியம், 12:25 மணிக்கு, புதுச்சேரியை வந்தடையும்.

மதியம் 12:45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் மதியம், 2:30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். ஐதராபாத்தில் இருந்து மாலை 3:05 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4:50 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.

புதுச்சேரியில் இருந்து மாலை 5:10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6:35 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *