கடலூர் திருவள்ளுவர் சிலை,வெள்ளி விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திருவள்ளுவர் திருவுருவ படத்தினை திறந்து வைத்தார்

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தின் துவக்கமாக மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று திருவள்ளுவர் திருவுருவ படத்தினை திறந்துவைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் உலகிற்கு அளித்த திருக்குறள் சார்ந்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் , தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொது நூலகத் துறையின் சார்பில் மாவட்ட மைய நூலகத்தில் இன்று 23.12.2024 முதல் 31.12.2024 வரை திருக்குறள் விளக்க உரைகள், கருத்தரங்கம், மாணவ மாணவிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி-வினா மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகிறது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி-வினா மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் லோ.சக்திவேல், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் (பொறுப்பு) சுந்தர், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *