திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் கண்டிரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஜீவா நகரில் வசிக்கும் மக்கள் கடந்த தொடர் மழையில் தொகுப்பு வீடுகள் மிகவும் மோசமடைந்து உள்ளது. வீட்டில் வசிப்பதற்கே அச்சமாக உள்ளது
என பொதுமக்கள் கூறியதை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் லெனின் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோபிநாத், ஆறுமுகம், அந்தோணி, எட்வர்ட் ராஜ் மற்றும் கிளை நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடவாசல் தெற்கு ஒன்றியம் கண்டிரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஜீவா நகரில் 15 தொகுப்பு வீடுகள் கடந்த வடகிழக்கு பருவ மழையினால் மேற் கூரைகள் சிமெண்ட் காரைகள் இடிந்து விழுந்து எந்த நிலையிலும் வீடு முற்றிலுமாக இடிந்து விழும் மோசமான நிலையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத அவல நிலையில் உள்ளது. மேலும் நாரணமங்கலம் ஊராட்சி இரண்டாவது வார்டு காலனி தெருவில் வசித்து வரும் சாந்தி கணவர் பெயர் குமரேசன், கணவர் காலமாகிவிட்டார்.
இவர் தன்னுடைய ஒரு பெண் குழந்தையுடன் பழுதடைந்த வீட்டில் தான் வசித்து வருகிறார்.
தற்பொழுது பெய்த கன மழையில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து விடும் நிலையில் வேறு வழி இன்றி வீட்டில் வசித்து வருகிறார். இதே போல் குடவாசல் ஒன்றியம் முழுவதும் உள்ளது. எனவே பாதிப்பு அடைந்த வீடுகளையும் சீர் செய்தும், முற்றிலும் பாதிப்படைந்த வீடுகளை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டி தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய தீர்வு காணப்படாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என சிபிஎம் குடவாசல் ஒன்றிய செயலாளர் லெனின் தெரிவித்தார்.