பரமத்தி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரிக்கை தமிழக அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் மாநில சங்கத் தலைவர் வேலுசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், மாணிக்கநத்தம் ஊராட்சி மற்றும் இருகூர் ஊராட்சிக்கு உட்பட பகுதிகளில், பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளில் இருந்து கழிவுநீரைக் கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்ய பேரூராட்சிகள் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மாணிக்கநத்தம் ஊராட்சி, இருகூர் ஊராட்சி மற்றும் வீரணம்பாளையம் ஊராட்சி பகுதிகள் செழிப்பான விவசாய பகுதிகளாக உள்ளது. இப்பகுதிகளில் விவசாயிகள் கரும்பு, நெல், வாழை, மரவள்ளி கிழங்கு, தென்னை, எண்ணை வித்துக்கள் மற்றும் சிறுதானிய பயிர்கள் அதிகம் சாகுபடி செய்கிறார்கள்.
பரமத்தி பேரூராட்சி மற்றும் வேலூர் பேரூராட்சி பகுதிகளின் கழிவுநீரை கொண்டு வந்து சுத்திகரிப்பு என்ற பெயரில் சில நேரங்களில் சுத்திகரிப்பு செய்யாமல் திறந்து விடும் அவல சூழ்நிலையும் உருவாகும், இதனால் மூன்று ஊராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 2000 ஏக்கர் விளை நிலங்களின் மண் வளம் பாதிக்கப்பட்டு, பயிர் விளைச்சல் இல்லாமல் மலட்டுத்தன்மையை உருவாக்கும், சுகாதார கேடு விளைவிக்கும், மாசடைந்த கழிவுநீரின் துர்நாற்றம் காற்றில் பரவினால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அடிக்கடி தொற்று நோய் உருவாகும் மற்றும் நிலத்தடி நீர் மாசடையும்.
விவசாயம் நிறைந்த இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் திட்டத்தை தமிழ்நாடு அரசின் பேரூராட்சிகள் நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக இவ்வறிக்கையின் மூலம் வலியுறுத்துகிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்