வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் 1000 ஆண்டு பழமையான ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தை புனரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்ச மங்கலம் கிராமத்தில் பழமையான ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் ஆலயம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இவ்வாலயம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இவ்வாலயம் கருங்கல் மற்றும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டதாகும். இவ்வாலயத்தில் இருந்த வாகனங்கள் வைப்பு அறை, சமையலறை, முன் மண்டபம் சுற்றுச்சுவர் ஆகியவை முற்றிலும் சிதிலமடைந்து விட்டது.

இயற்கையின் சீற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சிதிலமடைந்து வருகிறது. ஆலயத்தை சுற்றி இருந்த சுற்றுச்சுவர், மடப்பள்ளி, முன் மண்டபம், கருடன் மண்டபம் உள்ளிட்டவைகள் முற்றிலும் சிதறமடைந்து இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு போய்விட்டது.

இருப்பினும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை சீற்றத்துக்கு ஈடு கொடுத்து கருங்கல்லால் கட்டப்பட்ட கருவறை மண்டபம் மட்டும் எஞ்சி நிற்கின்றது. கருவறை மண்டபத்திற்கு மேலே மரங்கள் முழுமையாக கட்டிடம் கீழே விழும் அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது. இவ்வாலயத்தில் அவ்வப்போது அரசமரம் உள்ளிட்ட மரங்கள் முளைப்பதும் அவைகளை அவ்வப்போது கிராமத்தினர் மூலம் அப்புறப்படுத்தப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இவ்வகை மரக்கன்றுகள் முளைத்து வேர் விட்டு மரமாக ஆனதை அடுத்து ஆலயத்தின் வடகிழக்கு பகுதியில் மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

எனவே இது போன்று பழமையான ஆலயங்களில் முளைத்து வரும் மரக்கன்றுகளை ரசாயன மருந்தினை பயன்படுத்தி முற்றிலும் அழித்து ஆலயங்கள் சேதமடையாமல் பாதுகாத்திட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *