எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள பொங்கல் செங்கரும்பு. இடைதரகர்கள் இன்றி அரசே நேரடி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை.கடந்தஆண்டு அரசு 35 ரூபாய் வழங்கிய நிலையில் தங்களுக்கு 22 ரூபாய் மட்டுமே கிடைத்ததாக புகார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த செம்பதனிருப்பு, காத்திருப்பு, ராதாநல்லூர், கீழையூர்,கருவி,கிடாரம்கொண்டான் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. பத்து மாத பயிரான பொங்கல் கரும்பு கடந்த ஆறு ஆண்டுகளாக அரசே கொள்முதல் செய்ததால் கரும்பு விவசாயிகள் தற்பொழுது அதிக அளவில் பொங்கல் கரும்பு பயிரிட்டுள்ளனர். ஏக்கர் ஒன்றிற்கு ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் செலவு செய்து கரும்பை பாதுகாத்து வந்த நிலையில் கடந்த மாதம் சீர்காழியில் பெய்த அதிக கனமழையின் காரணமாக கரும்புகள் சாய்ந்ததால் மேலும் கூடுதலாக செலவு செய்து தற்பொழுது அறுவடைக்கு தயாராக உள்ளது.இந்நிலையில் அரசு பொங்கல் தொகுப்பில் அரிசி, சர்க்கரை மட்டும் தருவதாக அறிவித்ததால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் கூறுகையில் சென்ற ஆண்டுகளைப் போலவே அரசு கரும்பை கொள்முதல் செய்யும் என நம்பி தங்கள் வைத்திருந்த நகைகளை அடகு வைத்தும் வட்டி கடன் வாங்கி தற்போது கரும்பு விவசாயம் செய்திருந்த நிலையில் அரசு கரும்பு கொள்முதல் குறித்து அறிவிக்காதது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். எனவே கரும்பு விவசாயிகளை காக்கும் பொருட்டு பொங்கல் தொகுப்பில் கரும்பை வழங்கவும் இடைதரகர்கள் இன்றி அரசே விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த ஆண்டு கரும்பு ஒன்றுக்கு 35 ரூபாய் அரசு வழங்கிய போதும் தங்களுக்கு 22 ரூபாய்தான் வழங்கப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே விவசாயிகளிடம் அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.