திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன.

‘கட்சியை வழிநடத்து ஆட்சிக்கு வழிகாட்டு’ என்ற வாசகத்துடன் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, தந்தை பெரியார் துணையோடு, திமுக கட்சிக் கொடியுடன் அண்ணா அறிவாலயத்தில் இருந்து தமிழ்நாடு சட்டப்பேரவை நோக்கி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ கனிமொழி செல்வது போல அந்த சுவரொட்டியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதில், Way to 2026 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் எதிரிலும் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த சுவரொட்டிகள் கனிமொழியை வாழ்த்துவதாக மட்டுமல்லாது கட்சியிலும், ஆட்சியிலும் அவருக்கான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் அமைந்திருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் கனிமொழி கருணாநிதிக்கு மாநில அரசியலில் அங்கம் வகிக்கும் வகையில் வாய்ப்புகள் வந்து சேராதா? என்ற அவரது ஆதரவாளர்களின் ஏக்கத்தின் வெளிப்பாடாகவும் இந்த சுவரொட்டிகள் அமைந்திருக்கின்றன.

முன்னனுபவம் ஏதும் இல்லாத குறிப்பிட்ட சிலருக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 25 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் அனுபவம் உள்ள கனிமொழி கருணாநிதிக்கு, மாநில அரசியலில் இதுவரை எந்த வாய்ப்பும் வழங்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த சுவரொட்டிகளை அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ளது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *