தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாவூர்சத்திரம் ஆர். கே. பெட்ரோல் பங்க் அருகே ஆல்வின் என்பவர் 15.01.2025 அன்று அவரது காரில் சென்று கொண்டிருந்த போது காரின் பின்புறத்தில் Yamaha R15 இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரண்டு நபர்கள் காரின் பின்புறம் மோதி விபத்தை ஏற்படுத்தினர்.
இதுகுறித்து காரின் உரிமையாளரான ஆல்வின் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர். உமா மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டதில் மேற்படி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது 17 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் மேற்படி சிறுவனுக்கு 18 வயது நிரம்பாமலும், ஓட்டுனர் உரிமம் பெறாமலும் இருசக்கர வாகனத்தை இயக்க அனுமதித்த சிறுவனின் தந்தையான தென்காசி பகுதியை சேர்ந்த செரீப் நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார். மேலும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகள் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனம் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்து அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பெற்றோர்கள் அலட்சியம் காட்டக்கூடாது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க கூடாது இவ்விஷயத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.